திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு:விதிகளை மீறிய 11 வாகன உரிமையாளர்களுக்கு அபராதம்

திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இந்த சிலைகளை ஏற்றி வந்தபோது, விதிகளை மீறிய 11 வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-09-21 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவில் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க விதிமுறைகளை மீறி வந்த 11 வாகன உரிமையாளர்களுக்கு ரூ.2½ லட்சம் அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விதிமுறைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தொடர்பாகவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது தொடர்பாகவும் இந்து அமைப்புகளின் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் கொண்டு போலீஸ் நிலைய அளவிலும், உட்கோட்ட அளவிலும் கடந்த 12-ந் தேதியும், போலீஸ் சூப்பிரண்டு மூலம் 13-ந் தேதியும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பிரதிஷ்டை செய்வது தொடர்பாகவும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், தனித்தனியாக அறிவுரைகள் வழங்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, கடந்த 18-ந் தேதி விநாயகர் சிலைகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக திருச்செந்தூருக்கு கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

11 வாகன உரிமையாளர்களுக்கு அபராதம்

இந்த ஊர்வலத்தில் வந்த வாகனங்களில் 11 வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகளை வாகனங்களில் கட்டி வந்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறாக ஒலிபெருக்கியால் அதிக சப்தம் எழுப்பிக் கொண்டு ஊர்வலத்தில் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகளுடன் வந்த 11 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு போலீசார் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்