விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கறம்பக்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சீனிகடை முக்கம், தென்னகர், சடையன் தெரு, பஸ் நிலையம், நரங்கியப்பட்டு உள்பட 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதைதொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தாரை தப்பட்டைகள் முழங்க கறம்பக்குடி சீனிகடை முக்கம் பகுதி ஊர்வலமாக சென்றடைந்தன. பின்னர் அங்கிருந்து சிலைகளின் ஒன்றுபட்ட ஊர்வலம் நடைபெற்றது.
போலீசார் பாதுகாப்பு
இந்துக்களின் ஒற்றுமை எழுச்சி ஊர்வலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி வைத்து பேசினார்கள். கரகாட்டம், ஒயிலாட்டம், நாட்டிய குதிரை என ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் தொடங்கியது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம், சிலை உடைப்பு, கல்வீச்சு, போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 9 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 19 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்வலத்தில் முன்பும், பின்பும் அணிவகுத்து சென்றனர்.
ஆற்றில் கரைப்பு
முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த ஊர்வலம் சீனிகடை முக்கத்தில் தொடங்கி திருவோணம் சாலை, தட்டாவூரணி சாலை, தட்டாரத்தெரு, கடைவீதி பள்ளிவாசல் வீதி, பஸ் நிலையம், கச்சேரிவீதி, புதுக்கோட்டை ரோடு வழியாக சென்று. திருமணஞ்சேரி அக்னி ஆற்றை அடைந்தது. பின்னர் விழா குழுவினர்கள் பூஜைகள் செய்து ஆற்றில் சிலைகளை கரைத்தனர்.
கீரமங்கலம்
கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலை இன்று மாலை ஊர்வலமாக வாகனத்தில் ஏற்றிச் சென்று கரைத்தனர்.