கந்தசஷ்டி விழா தொடங்கியது

நீலகிரியில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2022-10-25 18:45 GMT

கூடலூர், 

நீலகிரியில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கந்தசஷ்டி விழா தொடக்கம்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னிதானத்தில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வருகிற 29-ந் தேதி வரை தினமும் காலையில் முருகனுக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 31-ந் தேதி காலை முதல் மாலை வரை ஹோமங்கள், விசேஷ பூஜைகள் நடக்கிறது.

திருக்கல்யாணம்

இரவு 7 மணிக்கு கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகப்பெருமான் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி கந்தசஷ்டி திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நடக்கிறது.

ஊட்டி லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. இன்று (புதன்கிழமை) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முதல் நாள் உற்சவம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) தர்மசாஸ்தா பஜனை சபையினர் சார்பில் 2-வது நாள் பூஜையும், 28-ந் தேதி 3-ம் நாள் உற்சவம், 29-ந் தேதி 4-ம் நாள் உற்சவம் நடக்கிறது.

30-ந் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6.05 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையடுத்து 31-ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. இதேபோல் எல்க்ஹில் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்