மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - டிரோன் பறக்க தடை

மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர்.

Update: 2023-06-14 16:32 GMT

மாமல்லபுரம்,

ஜி-20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இதன் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அமைப்பின் வெவ்வேறு கருத்தியல் மாநாடுகள் இந்தியாவில் உள்ள முக்கிய பாரம்பரிய பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னையில் கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதிகளில் மாநாடு நடந்தது. புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31-ந்தேதிகளில் அறிவியல் மாநாடு நடைபெற்றது. புதுடெல்லியில் உச்சிமாநாடு நடத்தப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து மாமல்லபுரம், ரேடிசன் ரிசார்ட்டில் 15-ந்தேதி(நாளை), 16-ந்தேதி(வெள்ளிக்கிழமை) ஜி-20 அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகள் பங்குபெறும் டபிள்யூ-20 மாநாடு நடக்கிறது. தொடர்ந்து 17-ந்தேதி (சனிக்கிழமை) காலை பெண் பிரதிநிதிகள் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிடுகின்றனர் அதே நட்சத்திர விடுதியில் 19 மற்றும் 20-ந்தேதிகளில் தேதிகளில் மற்றொரு மாநாடு நடக்கிறது.

இதனை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் மாநாடு நாட்களில் விடுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் சூப்பிரண்டு ருக்மாங்கதன் மற்றும் பிற பாதுகாப்பு அலுவலர்களுடன், மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு நடக்க உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இன்று முதல் மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர். இன்று இரவுக்குள் அனைத்து பிரதிநிதிகளும் ஹோட்டல்களில் வந்து தங்க இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் உத்தரவின்படி ஓட்டல்களில் துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்பும், வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்