மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கம்

மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படுவதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2023-07-04 18:45 GMT

சிறப்பு ரெயில்

தூத்துக்குடியில் இருந்து மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு அதிக அளவில் மக்கள் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரெயிலை கடந்த மே மாதம் மத்திய ரெயில்வே அறிவித்து இயக்கியது. பின்னர் கடந்த ஜூன் மாதம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் ஜூலை மாதமும் வாராந்திர ரெயிலை இயக்குவதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி-மும்பை

அதன்படி மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் (01143) வருகிற 7, 14, 21, 28 (வெள்ளிக்கிழமை தோறும்) ஆகிய நாட்களிலும், தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரெயில் (01144) வருகிற 9, 16, 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் இயக்கப்படுகிறது. மும்பையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் இரவு 11 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து காலை 4 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மதியம் 3.40 மணிக்கு மும்பையை சென்றடைகிறது.

இந்த ரெயில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், ரெய்ச்சூர், வாடி, காலபர்கி, சோலாபூர், தாண்ட், புனே, லோனவாலா, கல்யாண், தாதர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் நலச்சங்கம் நன்றி

இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மிகுந்த பலன் பெறுவார்கள் என்றும், சிறப்பு ரெயில் இயக்கிய மத்திய ரெயில்வே மற்றும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்