கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி 2 வாரம் போராட்டம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி 2 வாரம் போராட்டம் நடத்த அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-13 20:48 GMT


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க மறுக்கிறது. இதனால் தமிழக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை.

டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த குருவைப் நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகிப் போய்விட்டன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்காததால், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளது. கர்நாடக அரசு தண்ணீர் தர வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரும் வகையிலும் மேலும் 4 வாரங்களுக்கு அமைதியான முறையில் திருச்சியில் போராட்டம் நடத்த அனுமதிக்கவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாமல் திருச்சியில் 2 வாரங்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. போராட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்