கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்துவெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் இளநீர் :கொள்முதல் செய்ய வியாபாரிகள் இடையே போட்டி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இளநீர் ஏற்றுமதியாகிறது.;

Update:2023-04-03 00:15 IST

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது கொளுத்தும் வெயிலால் சாலையில் நடந்து செல்லும் போது அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிர்பானங்களை அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளநீர், மோர், தர்ப்பூசணி பழம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைகின்ற இளநீர் டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் வியாபாரிகள் ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு விளையும் இளநீர் மிகவும் சுவையாக இருப்பதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு இளநீரை கொள்முதல் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பச்சை இளநீரை ரூ,15-க்கும், செவ்விளநீரை ரூ.18-க்கும் கொள்முதல் செய்தனர். தற்போது பச்சை இளநீர் ஒன்றை ரூ.18-க்கும், செவ்விளநீர் ஒன்றை ரூ.21-க்கும் என்று மொத்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் இளநீருக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதனால் இங்கு விலையும் இளநீர்களை லாரிகள் மூலம் மும்பை மற்றும் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறோம். இளநீர் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இளநீருக்கு திடீரென்று கிராக்கி ஏற்பட்டுள்ளது. கோடை காலம் முடியும் வரை இளநீருக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்