இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 217 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 217 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

Update: 2022-12-05 00:00 GMT

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 217 ஏழை ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடந்தது. இதில் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீசுவரர் கோவில் மண்டபத்தில் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் விழா நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:-

எத்தனை தடைகள் வந்தாலும்...

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு கல்லூரிகளை நம்முடைய அரசு தொடங்கி இருக்கிறது. கொரோனோ நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு இலவசமாக வழங்கக்கூடிய பணியையும் இந்த துறை செய்தது.

அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் 47 கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டு தந்திருக்கிறோம். பல கோவில்களிலும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறோம். பெண் ஒருவரை அர்ச்சகராக நியமித்திருக்கிறோம். கோவில் பொது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். ரூ.3,700 கோடி கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்து இருக்கிறோம். சமத்துவத்தை விரும்பாத சில சக்திகளின் மூலமாக, எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்டப்போராட்டத்தையும் நாம் நடத்திகொண்டிருக்கிறோம்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை தொடர்ந்து பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதத்தை வைத்து நம் மீது இன்றைக்கு பல பழிகளை, குற்றங்களை, குறைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது.

நம்மை பொறுத்தவரைக்கும் நாம் அண்ணா வழியில், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணக்கூடியவர்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அந்த நிலையில் நாம் நம்முடைய பணியை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.

அதனுடைய அடையாளம்தான் 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தியிருக்கிறோம். இந்த 31 ஜோடி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 217 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழ் பெயர்

மன்னராட்சியாக இருந்தாலும் சரி, மக்களாட்சியாக இருந்தாலும் சரி, கோவில்கள் என்பது மக்களுக்காகத்தான். கோவில்கள் ஒரு சிலருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நிலையை மாற்றத்தான் நீதிக்கட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

எல்லாவற்றையும் தாண்டி மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.

முன்பெல்லாம், 'நாம் இருவர், நமக்கு மூவர்' என்று சொன்னோம். பின்னர் 'நாம் இருவர், நமக்கு இருவர்' என்று ஆனது. இப்பொழுது 'நாம் இருவர், நமக்கு ஒருவர்' என்று இருக்கிறது. நாளை 'நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர்' இல்லையெனில் 'நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை' இப்படி எல்லாம் வரலாம். இதையெல்லாம், சீர்தூக்கி பார்த்து, நாட்டின் நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையை கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களை பெற்று அதற்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்.

உங்களின் தந்தையாக...

அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும். சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதல்-அமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்ற அந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன், சென்னை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மணமக்களுக்கு பரிசு

நிகழ்ச்சி ஏற்பாட்டின்படி, முதல் 2 ஜோடிக்கு மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு தருவதாக இருந்தது. மற்ற ஜோடிகளுக்கு அறநிலையத்துறை ஊழியர்கள் பரிசு வழங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே பரிசு வழங்கினார்.

இதனால் அனைத்து ஜோடிகளுமே மகிழ்ச்சி அடைந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதமும் பெற்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிசு கூடையில் மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்தனியே உயர் ரக கைக்கடிகாரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீர்வரிசை பொருட்கள்

திருமணம் முடிந்த பிறகு மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை இந்து சமய அறநிலையத்துறை வழங்கியது.

அதன்படி கட்டில், மெத்தை, தலையணை, மிக்சி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், வாளி, கியாஸ் அடுப்பு, குக்கர் உள்பட சமையல் பாத்திரங்கள், விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்கள், அரிசி பானை, கண்ணாடி பொருத்தப்பட்ட பீரோ, மருந்தீசுவரர்-திரிபுரசுந்தரி போட்டோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்