75-வது சுதந்திர தினத்தையொட்டி இலவச அனுமதி: மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்

75-வது சுதந்திர தினத்தையொட்டி இலவச அனுமதி அளிக்கப்பட்டதால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.

Update: 2022-08-09 10:52 GMT

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசு கடந்த 5-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை 11 நாட்களுக்கு இந்தியா முழுவதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க இலவச அனுமதி வழங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் இலவசமாக பார்த்து ரசித்தனர்.

குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் பார்வையாளர் கட்டணமாக நுழைவு கட்டண மையங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தனர்.

நேற்றும் இலவச அனுமதியால் புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவுக்கு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்