ஆள்மாறாட்டம் செய்து 2 பேருக்கு சொந்தமான ரூ.60 லட்சம் நிலம் மோசடி

ஆள்மாறாட்டம் செய்து 2 பேருக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-17 20:47 GMT

ஆவடி,

சென்னை அம்பத்தூர் அடுத்த ராமாபுரம் காளிதாஸ் தெருவை சேர்ந்தவர் சதாரம் அம்மாள் (வயது 73). ஆவடி அடுத்த வெள்ளானூர் கிராமம் ஆரிக்கம்மேடு லட்சுமி நகரில் உள்ள இவருக்கு சொந்தமான 4,800 சதுர அடி நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து வேறு 2 பேருக்கு விற்பனை செய்து விட்டதாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, உதவி கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து சதாரம் அம்மாள் நிலத்தை 2 பேருக்கு விற்றது தெரிந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.

ஒருவர் கைது

அதேபோல் அதே பகுதியில் உள்ள விருகம்பாக்கம் அய்யப்பா நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்த ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி நிலத்தையும் சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து 2 நபர்களுக்கு விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 பேரின் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலங்களை ஆள்மாறாட்டம் மூலம் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சென்னை காட்டூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மோகன்தாஸ் (35) என்பவரை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்