நிதி நிறுவனம் நடத்தி ரூ.9½ லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரலாம்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.9½ லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரலாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2023-06-30 19:51 GMT

திருச்சி தில்லைநகர் ராஜகிரிசாலை 2-வது மாடியில் கார்லா இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்த சங்கர், ஆனந்தன், பெர்னாண்டஸ் தாமஸ் பவுல் ஆகியோர் பல முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தினர்.

அதில் 100 நாட்கள் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் திட்ட முடிவில் ரூ.1½ லட்சமும், 200 நாட்கள் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் திட்ட முடிவில் ரூ.2 லட்சமும், 1 வருட திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் லாபத்தொகையாக மாதந்தோறும் ரூ.8 ஆயிரமும் வருட முடிவில் அசல்தொகை திருப்பி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதனை நம்பி மணிவேல் (வயது 60) என்பவர் தன் பெயரிலும், தனது மனைவி பெயரிலும் ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளார். அதில் ரூ.9 லட்சத்து 68 ஆயிரத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தை நேரில் சென்று பார்த்தபோது, நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது.

எனவே அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் திருச்சி மன்னார்புரம் காஜாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுக்கலாம். இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்