வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.75 ஆயிரம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.75 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-22 19:21 GMT

புள்ளம்பாடி ஒன்றியம் கோவாண்டாகுறிச்சி ஊராட்சி வடுகர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் டிரால்டின் ஜெயக்குமார் (வயது 36). பட்டதாரியான இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குளோபல் டிராவல்ஸ் இன்போ என்ற நிறுவனத்தை அணுகி உள்ளார். அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் சவுதி அரேபியா நாட்டுக்கு அவரை அனுப்பி வைக்க ரூ.2 லட்சம் கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் முன்பணமாக ரூ.75 ஆயிரத்தை அந்த நிறுவனத்தினரிடம் கொடுத்தார். ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் வெளிநாட்டுக்கு அவரை அனுப்பி வைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால், அந்த நிறுவனத்தினர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து டிரால்டின் ஜெயக்குமார் கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் குளோபல் டிராவல்ஸ் இன்போ நிறுவனத்தின் நிர்வாகி சென்னை ஆவடியை சேர்ந்த மின்ஹாஜுதீன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்ஹாஜுதீன் ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்