திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் ரூ.48¾ லட்சம் மோசடி

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் ரூ.48¾ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-01 21:16 GMT

திருமணம் செய்வதாக...

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ரியாஸ்தீன் (வயது 24). இவர் சென்னையில் உள்ள அரபிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் பவுஜானா பர்வின் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடையில் காதலாக மாறியது.

பின்னர் பவுஜானா பர்வின், முகமது ரியாஸ்தீனை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய முகமது ரியாஸ்தீன், அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பல்வேறு கட்டமாக ரூ.48 லட்சத்து 72 ஆயிரத்தை அனுப்பினார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை. இதனால் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

பெண் கைது

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து, அந்த பெண்ணை தேடி வந்தனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதும், அவருடய உண்மையான பெயர் தீனாபானு (38) என்பதும் தெரியவந்தது. மேலும் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், இதுபோல் பல வாலிபர்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரிக்கு சென்ற தனிப்படையினர் தீனாபானுவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்