வீடு கட்டித்தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-23 20:30 GMT

கோவை

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.13¾ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கூலித்தொழிலாளி

கோவை மாவட்டம் காரமடை குன்னத்தூர் காலனியை சேர்ந்தவர் மருதாசலம் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

தொண்டாமுத்தூரை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஷீபா ராணி என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

ரூ.13¾ லட்சம் மோசடி

இதை உண்மை என நம்பிய நான் உள்பட 26 பேர் தலா ரூ.52 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 78 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்தோம். ஆனால் அவர் கூறியபடி எங்களுக்கு வீடு கட்டி தராமல் ஏமாற்றி விட்டார். இதற்கு அவரது கணவர் ராஜசேகர், மகன் இம்மானுவேல் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.எனவே 3 பேர் மீதும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். புகாரின் பேரில், போலீசார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஷீபா ராணி, அவரது கணவர் ராஜசேகர், மகன் இம்மானுவேல் ஆகிய 3 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்