ஆன்லைனில் செல்போன்கள், ேகமரா வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி

களியக்காவிளை அருகே போலி முகவரி கொடுத்து ஆன்லைனில் 3 செல்போன்கள், கேமரா வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-06 18:45 GMT

களியக்காவிளை, 

களியக்காவிளை அருகே போலி முகவரி கொடுத்து ஆன்லைனில் 3 செல்போன்கள், கேமரா வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விலை உயர்ந்த செல்போன்கள்

மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் அஜித் என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த 3 செல்போன்கள், ஒரு கேமரா அடங்கிய ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் களியக்காவிளையை அடுத்த மீனச்சல் பகுதியில் உள்ள ஒரு முகவரி இருந்தது.

இதையடுத்து ஊழியர் அஜித் அந்த பார்சலில் இருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியில் வரும்படி அழைத்தார். இதையடுத்து அஜித் அந்த முகவரிபடி களியக்காவிளையை அடுத்த மீனச்சல் பகுதிக்கு பார்சலை கொண்டு சென்றார்.

பணம் கொடுக்காமல் தப்பி சென்றனர்

அப்போது அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பார்சலை பெற்று கொண்டனர். அதற்கான பணத்ைத அஜித் கேட்ட போது பணம் கொடுக்காமல் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருவிக்கரையை சேர்ந்த அகில் கிருஷ்ணா (வயது 22), அமித்குமார் (21) என்பது தெரிய வந்தது.

ரூ.1.10 லட்சம் மீட்பு

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று அகில் கிருஷ்ணா, அமித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து களியக்காவிளைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் போலி முகவரி கொடுத்து ஆன்லைனில் விலை உயர்ந்த செல்போன்கள், கேமரா வாங்கிவிட்டு பணத்ைத கொடுக்காமல் தப்பி சென்றதும், பின்னர் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 3 செல்போன்களையும் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் விற்ற ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் மற்றும் கேமராவை போலீசார் மீட்டனர். மேலும் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்