ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 1.80 லட்சம் தருவதாக கூறி ரூ.80 கோடி மோசடி

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் தருவதாக கூறி 80 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2023-06-07 18:45 GMT

கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி அடுத்த பெருகோபனப்பள்ளி ஞானவேல், பெங்களூரு, சிக்கசந்திரா பிரேமா மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சகோதரர்கள் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனியார் சீட்டு கம்பெனியை நடத்தி வருவதாக கூறினர். அவர்களிடம், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு, 1,800 ரூபாய் வீதம், 100 நாட்களில், 1.80 லட்சமாக திருப்பி தரப்படும் என ஆசை வார்த்தை கூறி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

முதலீடு செய்தோம்

அதை உண்மை என நம்பி நாங்கள் எங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறினோம். அதன் மூலம், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். முதலீட்டார்களால் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது. அந்த பணத்தை ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில், டிரேடிங் உள்ளிட்டவைகள் செய்து லாபம் தருவதாக தனியார் நிறுவனத்தினர் உறுதி அளித்தனர்.

அதன்படி கடந்த, 2022-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு லாபத் தொகையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின் அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களது தர்மபுரி தலைமை அலுவலகம், போச்சம்பள்ளி, ஏலகிரி, ஓசூர் கிளை அலுவலகங்களும் மூடப்பட்டன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை

இந்த நிலையில் எங்களை ஏமாற்றியவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பெயரிலும் புதிய தனியார் நிறுவனம் தொடங்கி அதில் முதலீடு செய்தால் பழைய முதலீடுகளையும் சேர்த்து லாபத்தை தருகிறோம் என விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே நாங்கள் முதலீடு செய்த தொகையில், 80 கோடி ரூபாய் வழங்காமல் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அவர்கள் மீண்டும் ஒரு நிறுவனம் தொடங்கி உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்