திண்டிவனத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2½ லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-30 16:27 GMT

விழுப்புரம்,

திண்டிவனத்தை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (வயது 27), சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய இணையதள முகவரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை அவர் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய நபர், ஹரிஷ்குமாரிடம் இந்திய பணத்தை வெளிநாட்டு பணமாக மாற்றித்தந்தால் 10 சதவீத கமிஷன் தொகையை தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தன்னுடைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை கணக்குடன் இணைக்கப்பட்ட போன்பே மூலமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை அந்த நபர் கூறிய தனியார் செல்போன் செயலிக்கு பரிமாற்றம் செய்து 3004 வெளிநாட்டு டாலராக மாற்றினார்.

பணம் மோசடி

பின்னர் அந்த நபர் கூறிய லிங்கிற்குள் ஹரிஷ்குமார், பணத்தை பரிமாற்றம் செய்து வைத்திருந்ததை அவருக்கு தெரியாமலும், எவ்வித தொகை வழங்காமலும் நூதன முறையில் அந்த மர்ம நபர் அபேஸ் செய்துவிட்டார்.

இதுகுறித்து ஹரிஷ்குமார், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்