ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
மன்னார்குடியில் ஒருங்கிணைந்த பஸ்நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அடிக்கல் நாட்டு விழா
மன்னார்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் பஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டதால் தமிழகத்தில் முன்மாதிரியாக ரூ.26 கோடியே 76 லட்ச மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து பழைய பஸ்நிைலயத்தில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. தற்போது பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
நேற்று புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டு கட்டிடப்பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகரசபை துணைத்தலைவர் கைலாசம், நகர தி.மு.க. செயலாளர் வீரா.கணேசன், நகராட்சி பொறியாளர் குணசேகரன், வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்மாதிரியாக அமையும்
பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மன்னார்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்படும். மன்னார்குடியில் அமைய உள்ள பாதாள சாக்கடை திட்டம் இந்தியாவே பின்பற்றும் அளவிற்கு முன்மாதிரியாக அமையும் என்றார்.