பார்முலா 4 கார் பந்தயம்; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பந்தய தடம் அமைக்கும் பணிகளுக்காக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

Update: 2023-12-01 10:16 GMT

சென்னை,

சென்னையில் வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கார் பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்திற்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, சாலை மறு சீரமைப்பிற்கு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. ஐ.பி.எல். போட்டி நடத்தப்படும் நடைமுறையில்தான் இந்த கார் பந்தயமும் நடத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

பந்தய தடம் அமைக்கும் பணிகளுக்காக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என்றும், அவ்வாறு வெட்டப்பட்டால் மாசு கட்டுபாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பந்தயத்தை நடத்தும் நிறுவனங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பந்தய வீரர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்பாண்கள், கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பந்தயத்தை நடத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், ஏற்கனவே ஐதராபாத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் பந்தயத்தை நடத்தியுள்ளதாகவும் நிறுவனங்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிமன்றம், கார் பந்தய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்