முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு
தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
பொதுக்கூட்டம்
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம், தாடிக்கொம்புவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், அகரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான அகரம் சக்திவேல் தலைமை தாங்கினார். தாடிக்கொம்பு பேரூர் செயலாளர் (பொறுப்பு) முத்தையா வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் சந்தானம், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
நத்தம் விசுவநாதன் பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறிய 520 வாக்குறுதிகளில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் கூறி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிவிட்டது.
மக்கள் விரோத ஆட்சி
மின் கட்டணத்தை குறைப்பதாக கூறிய தி.மு.க., அதன் கட்டணத்தை தற்போது பலமடங்கு உயர்த்திவிட்டது. இதுதவிர பால் விலை, சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றின் உயர்ந்துள்ளது. 'நீட்' தேர்வை ரத்து செய்வதாகவும், ஏழை மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான கல்விக்கடனை ரத்து செய்வதாகவும் கூறிய தி.மு.க., அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக பல லட்சம் அரசு ஊழியர்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதியை தி.மு.க. கொடுத்தது. இதுவரை அதனை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது. சனாதனம் குறித்து பேசி குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரியை போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க. என்றும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கட்சி. மொத்தத்தில் தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர்கள் முருகன், சின்னச்சாமி, மயில்சாமி, சுப்பிரமணி, ஆரோக்கியசாமி, அகரம் பேரூர் துணைச்செயலாளர் முருகேசன், பாலம் ராஜக்காபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பாலம் கிருஷ்ணன், அகரம் பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தண்டபாணி, குழந்தை தெரசு, முன்னாள் கவுன்சிலர் குருசாமி, தாடிக்கொம்பு பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் மனோகரன், மகளிரணி செயலாளர் சாந்தி, வார்டு செயலாளர் கதிர்வேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.