பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.
விவசாயி
பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த மெணசி ஜீவா நகரை சேர்ந்தவர் பசுபதி (வயது 32). விவசாயி. இவர் சாமியாபுரம் கூட்ரோட்டை சேர்ந்த நாயக்கர் என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மஞ்சள் சாகுபடி செய்திருந்தார். தற்போது மஞ்சள் நன்கு வளர்ந்ததை தொடர்ந்து அவற்றை அறுவடை செய்ய எண்ணினார்.
இதனால் தர்மபுரியில் உள்ள உறவினர் ஒருவரிடம் இருந்து டிராக்டரை வாடகைக்கு வாங்கி வந்தார். அந்த டிராக்டரை ஓட்டி கொண்டு பசுபதி விவசாய நிலத்துக்கு சென்றார். அங்கு அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை டிராக்டரில் ஏற்றி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
பலி
வரப்பு ஒன்றில் ஏறியபோது, அவர் டிராக்டரை திருப்பினார். அப்போது டிராக்டரில் இருந்து நிலைதடுமாறி பசுபதி கீழே விழுந்தார். அந்த சமயம் டிராக்டரின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறினார்.
அவருடைய சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பசுபதியை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.