கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்குதீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் -பிரதமருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பிரதமருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2023-09-06 02:02 GMT

திருமங்கலம்,

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பிரதமருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.

சுங்கச்சாவடி

விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், பிரதமர் மோடிக்கு அனுப்புள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூல் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும். இந்தசுங்கச்சாவடியில் கட்டண வசூல் புள்ளி விவரங்களில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் இருப்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை இதுவரை 41 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. அதில் 11 லட்சம் வாகனங்கள் வி.ஐ.பி.களுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுங்கவரி வசூல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

இந்த சுங்கச்சாவடியை இயக்கும் நிறுவனத்தால் ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் பறிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்தாலும், நிலைமை மாறாமல் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்த உண்மை தன்மையை அறிய முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடுங்கள்.

அகற்ற வேண்டும்

இந்த சுங்கச்சாவடி விசாரணை முடிந்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடனடியாக சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களின் தனிப்பட்ட கவனத்தை நான் எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் கப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான நிவாரணம் கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்