சிறுவன் கொலையில் சித்தப்பாவுக்கு ஆயுள்தண்டனை

சிறுவனை கொன்ற வழக்கில் தீர்ப்பு நாளில் கோர்ட்டில் மயங்கி விழுந்த அவரது சித்தப்பா சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்நிலையில் ஆயுள்தண்டனை விதித்து அவரை வேலூர் ஜெயிலில் அடைக்க ஆரணி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-30 17:08 GMT

ஆரணி

சிறுவனை கொன்ற வழக்கில் தீர்ப்பு நாளில் கோர்ட்டில் மயங்கி விழுந்த அவரது சித்தப்பா சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்நிலையில் ஆயுள்தண்டனை விதித்து அவரை வேலூர் ஜெயிலில் அடைக்க ஆரணி கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுவன் கொலை

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 13). இவரது சித்தப்பா மலையாண்டி. கடந்த 2011-ம் ஆண்டு மே 27-ந் தேதியன்று பாபு என்பவருடைய கரும்பு தோட்டத்தில் வெங்கடேசன் கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணியை அமுக்கி கொலை செய்யப்பட்டான்.

வந்தவாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் வெங்கடேசனை அவரது சித்தப்பா மலையாண்டி கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்

ஆஜராக உத்தரவு

இவ்வழக்கு ஆரணி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜமூர்த்தி ஆஜராகி வாதிட்டார். இதில் சிறுவன் வெங்கடேசனை அவரது சித்தப்பா கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஜூன் 20-ந் தேதி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா தீர்ப்பு வழங்க இருந்தார். அப்போது மலையாண்டி நெஞ்சு வலியால் கோர்ட்டிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜராகும்படி இதுவரை 7 முறை கடிதம் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஜெயிலில் அடைக்க உத்தரவு

இந்த நிலையில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா குற்றவாளியான மலையாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு விதித்தார். அதற்கான நகலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலையாண்டியிடம் தீர்ப்பு உத்தரவு ஒப்படைக்கப்பட்டவுடன் மலையாண்டியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி விஜயா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்