''காங்கிரசை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்''-திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் ‘‘காங்கிரசை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்’’ என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

Update: 2023-06-25 19:11 GMT

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தொடர்ந்து சிம்லாவில் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குள் கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்து அடுத்த கூட்டத்தில் தீர்க்கப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான். காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மக்களிடம் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தோ்தலுக்கு முன்னதாக சில கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளும். சில கட்சிகள் தேர்தலுக்கு பின் காங்கிரசை ஆதரிக்கும். காங்கிரசை மையப்படுத்தி தான் தேர்தல் இருக்கும். திருமாவளவன் கருத்து சொல்வதினால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே செல்லமாட்டார். காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மாநில தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் பற்றி பிரதமர் மோடி பேசுவதால், அதனால் மக்கள் மனமாற்றம் வந்து பா.ஜனதாவை ஆதரிப்பார்கள் என்றால் அது ஏமாற்றத்தில் தான் முடியும். பா.ஜனதா ஆளும் மாநிலம் மற்றும் அதற்கு துணையாக இருக்கும் கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்துள்ளதா?. அரசு எந்திரம் தவறாக நடத்தப்படுகிறது. செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் சர்ச்சை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 கழிப்பறைகள் கட்டப்பட்டு வரும் பணியை அவர் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்