2-வது நாளாக தண்ணீர் வீணாக கேரளாவுக்கு செல்கிறது

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. நேற்று 2-வது நாளாக வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கேரளாவுக்கு செல்கிறது. அணை பாதுகாப்பு நிபுணர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-09-22 18:45 GMT

பொள்ளாச்சி, 

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. நேற்று 2-வது நாளாக வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கேரளாவுக்கு செல்கிறது. அணை பாதுகாப்பு நிபுணர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதகு உடைந்தது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 17.8 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையில் இருந்து திருமூர்த்தி அணை, ஆழியாறு அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கரும், ஆழியாறு புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 2 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

மழைக்காலங்களில் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை வெளியேற்ற 3 மதகுககள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது பருவமழையால் அணை முழுகொள்ளளவை எட்டி இருந்தது. இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் அணையின் நடுவில் உள்ள மதகில் இணைத்து கட்டப்பட்டு இருந்த சங்கிலி அறுந்து விழுந்தது. இதற்கிடையே மேலே இருந்த சுவர் (பீம்) இடிந்து விழுந்ததில் மதகு உடைந்தது. நீரின் அழுத்தம் காரணமாக மதகு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

நிபுணர்கள் குழு

இதனால் அணையில் இருந்து நேற்று 2-வது நாளாக தண்ணீர் வீணாக வெளியேறி ஆற்றில் சென்றது. இந்தநிலையில் சென்னையில் இருந்து அணை பாதுகாப்பு நிபுணர்கள் குழுவை சேர்ந்த தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் உள்பட 4 பேர் பரம்பிக்குளம் அணைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது என்ன காரணத்தால் சங்கிலி அறுந்து, மதகு அடித்து செல்லப்பட்டது, அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரம்பிக்குளத்தில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்ததால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேரளாவுக்கு செல்கிறது. மேலும் 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 63 அடியாக குறைந்து உள்ளது. மதகு சீரமைக்கும் பணிக்கு எவ்வளவு செலவாகும் என்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

30 டன் எடை

பரம்பிக்குளம் அணையில் கடந்த 1967-ம் ஆண்டு மதகு அமைக்கப்பட்டது. இந்த மதகின் உயரம் 27 அடியும், 30 டன் எடையும் கொண்டதாகும். ஒரு மதகு வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 20,750 கனஅடி நீர் வெளியேற்ற முடியும். கடந்த 2016-ம் ஆண்டு அணை புனரமைப்பு திட்டத்தின் கீழ் மதகின் சக்கரங்கள் பழுது நீக்கப்பட்டு, ரப்பரால் ஆன அடைப்பான்கள் மாற்றப்பட்டது.

சேதமடைந்த மதகு வழியாக முழுமையாக நீர் செல்வது நின்ற பிறகு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் மதகு சீரமைக்கப்பட்டு, மீண்டும் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்