சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் நகரமன்ற கூட்டத்தில் தலைவர் தகவல்

Update: 2023-01-25 19:00 GMT

வாணியம்பாடி,

வாணியம்பாடியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நகரமன்ற கூட்டத்தில் தலைவர் உமாசிவாஜி கணேசன் தெரிவித்தார்.

நகரமன்ற கூட்டம்

வாணியம்பாடி நகரமன்ற கூட்டம், நகரமன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் மாரிசெல்வி முன்னிலை வகித்தார். பொறியாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

உறுப்பினர் நாசீர் கான்:- சாலைகளில் அதிக அளவு நாய்கள், மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது. ஆகையால் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணியம்பாடியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருக்கு வெண்கல சிலைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும்.

நபிலாவகீல்:- நூருல்லா பேட்டை பகுதியில் ஏரி புறம்போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பல நாட்கள் ஆகியும் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை.

பாலங்கள் சேதம்

பஷீர் அஹமத்:- ஷாகிராபாத், ஆற்று மேடு, சி.எல்.சாலை ஆகிய பகுதியில் கிளை ஆற்றில் உள்ள பாலங்கள் சேதமடைந்து உள்ளது. மேலும் சுற்றுச் சுவர் இல்லாததால் பாதுகாப்பின்றி மாணவர்கள், பொதுமக்கள் பாலங்களை கடந்து செல்லுகின்றனர். அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.முஹம்மத் அனீஸ்:- நகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும், நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் இணைப்பு, புதிய வரி விதிக்க மனுக்கள் வழங்கினால் வேலை நடப்பதில்லை. ஜின்னா சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. ஆகையால் சென்டர் மீடியனை அகற்ற வேண்டும்.

இதனை தொடர்ந்து நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் பேசினார். அவர் பேசியதாவது:-

ரூ.5 ஆயிரம் அபராதம்

நகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து கால்நடை ஒன்றுக்கு உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிய அனுமதி பெற்ற பின் மறைந்த தலைவர்களின் சிலைகள் வைத்துக்கொள்ளலாம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோணமேடு பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.38 லட்சமும், பெண்கள் பூங்காவை சீரமைக்க ரூ.16 லட்சமும், அரசு மருத்துவமனை முன்பாக வடிகால் கட்ட ரூ.15 லட்சம் என ரூ.69 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கோனாமேடு பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தனியார் தொழிற்சாலை உரிமையாளர் ஏ.பா. நாசிர் என்பவர் அவருடைய சொந்த பணத்தில் ரூ 7.5 லட்சம் நகராட்சிக்கு வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதி குமார், சித்ரா, மா.பா.சாரதி, பிரகாஷ், ஆஷா பிரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்