ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் சிறந்த கல்வி சேவைக்காகதூத்துக்குடி மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது

ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் சிறந்த கல்வி சேவைக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.

Update: 2023-09-28 18:45 GMT

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் சிறந்த கல்வி சேவை வழங்கியதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டு உள்ளது.

கல்விக்கான கட்டமைப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.1000 கோடியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. நவீன காலத்திற்கு ஏற்றவாறு கல்விக்கான கட்டமைப்புகளை நிறைவேற்றியதால், மாணவர் சேர்க்கை கடந்த கல்வி ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காக உயர்ந்து உள்ளது. அந்த வகையில், இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022-ம் ஆண்டுக்கான போட்டியில் சிறந்த சமூக அம்சத்துக்கான விருது பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 3-வது இடம் கிடைத்து உள்ளது. தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக மாற்றியதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளியில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி மூலம் 37 வகுப்பறைகளுக்குரிய மேஜை, நாற்காலி, மின்விசிறி ஆகியவை கட்டமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 நூலகங்கள், 3 அரங்கங்கள், 6 ஆய்வுக்கூடங்கள் என கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளுடன், 6 உணவு அருந்துமிடம், 17 கழிப்பறை வசதிகள், ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினியும் வழங்கப்பட்டு உள்ளது. இத்தனை கற்றல் வசதிகளுடன் இந்த பள்ளி உருவாக்கப்பட்டதால் சிறந்த சமூக அம்சத்திற்கான விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது.

விருது

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நேற்று நடந்தது. இந்த விருதை மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்