உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் அன்னதானம் நடைபெறுவதையொட்டி உணவு பாதுகாப்புத்துறையினர் திடீரென்று ஆய்வு செய்தனர்.

Update: 2023-07-31 19:45 GMT

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 3-ம் நாளில் ஆடு, கோழி இறைச்சிகளை ஒன்றாக சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள். இதையடுத்து அன்னதானத்துக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் நேற்று ஆலய வளாகத்தில் உள்ள சமையல் கூடத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இதுகுறித்து அறிந்த திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ் மற்றும் அதிகாரிகள் ஆலயத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சமையல் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பிறகு உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமாக இருக்கிறதா? என்றும் சோதனையிட்டனர். அதையடுத்து அன்னதானத்துக்காக உணவு சமைப்பவர்கள் சுகாதாரமான முறையில் சமைப்பதை ஆலய நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும். அன்னதானம் சாப்பிட வருபவர்களுக்கு சுத்தமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று ஆலய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்