தக்காளி, இஞ்சியை தொடர்ந்து பச்சைமிளகாய் விலையும் உயர்வு

தக்காளி, இஞ்சியை தொடர்ந்து பச்சைமிளகாய் விலையும் உயர்வு

Update: 2023-07-12 19:39 GMT

தக்காளி, இஞ்சியை தொடர்ந்து பச்சை மிளகாய் விலையும் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்றதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காய்கறிகளின் விலை உயர்வு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, சின்னவெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தஞ்சை மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.110-க்கும், சின்னவெங்காயம் கிலோ ரூ.180-க்கும், இஞ்சி கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலை உயர்வு காணப்படுவதால் இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பச்சை மிளகாயின் விலையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, ஓட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் மிளகாய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதில், ஆந்திர மாநிலத்தில் விளையும் பச்சை மிளகாய் அதிக காரத்தன்மை கொண்டவை ஆகும்.

பச்சை மிளகாய்

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு ஓட்டன்சத்திரம், தேனி பகுதிகளில் இருந்து தான் பச்சைமிளகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் தற்போது அங்கு விளைச்சல் இல்லாததால் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில் அங்கும் மழை காரணமாக பச்சை மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

தஞ்சையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர். விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளின் விலை அதிகரித்து வந்த நிலையில் பச்சை மிளகாய் விலையும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அதிகரிக்கும்

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. பச்சை மிளகாய் தற்போது கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தான் வருகிறது. அங்கும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது. மேலும் விலை அதிகரிக்கும் நிலை தான் உள்ளது.என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்