காஞ்சீபுரத்தில் பட்டு சேலை விற்பனையகங்களில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு

காஞ்சீபுரத்தில் பட்டு சேலை விற்பனையகங்களில் கைத்தறித்துறையின் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-07-24 08:28 GMT

திடீர் ஆய்வு

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ஜவுளி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை கண்காணிக்க தமிழக கைத்தறி்துறை ஆணையாளர் விவேகானந்தன் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் காஞ்சீபுரம் மாநகரில் பறக்கும்படை அதிகாரிகளான கைத்தறித்துறை இணை இயக்குனர் கணேசன், உதவி இயக்குனர்கள் ஆனந்த், ஸ்ரீதர் மற்றும் செந்தாமரை ஆகியோர் காஞ்சீபுரம் காந்தி ரோடு, நடுத்தெரு, பி.எஸ்.கே. தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபலமான பட்டு ஜவுளி விற்பனை நிறுவனங்கள் 10-க்கும் மேற்பட்டவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வெளிமாநிலத்தில் இருந்து விசைத்தறியில் உற்பத்தி செய்த சேலைகள் விற்பனை செய்கிறார்களா எனவும் சோதனை நடத்தினார்கள். இவர்களது ஆய்வில் ஒரு கடையில் வெளிமாநிலத்தில் கைத்தறி சேலை ரகங்களை கொள்முதல் செய்து அதில் பட்டு முத்திரை அச்சிடப்பட்டு லேபிள் ஒட்டி விற்பனை செய்ததை கண்டறிந்து அந்த கடைக்கு கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்ட விதிகளை மீறியதாக நோட்டீஸ் வழங்கினார்கள்.

சட்டப்பூர்வ நடவடிக்கை

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

பட்டு சேலை விற்பனையகங்கள் கைத்தறி சேலைகளையே விற்பனை செய்ய வேண்டும். விசைத்தறியில் உற்பத்தியான சேலைகளை விற்பனை செய்யக்கூடாது. ஜவுளிக்கடைகள் அரசு சட்ட விதிகளை மீறினால் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை அல்லது விசைத்தறி சேலை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாகவோ அல்லது இரண்டும் இணைந்த தண்டனையாக வழங்கப்படும். கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது தொடர்பான புகார்களை 18005997637 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். காஞ்சீபுரம் கே.எஸ்.பார்த்தசாரதி தெருவில் இயங்கி வரும் கைத்தறித்துறை துணை இயக்குநர் அலுவலரையும் தொடர்பு கொண்டு நேரிலும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்