ஊருணிகள் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

சிவகங்கை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு ஊருணிகள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையோர வியாபாரிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2022-10-18 18:45 GMT

காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு ஊருணிகள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையோர வியாபாரிகள் அவதியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் தற்போது பரவலாக பல்வேறு இடங்களில் பகல், இரவாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் திருப்புவனம் அருகே பூவந்தி, திருப்பத்தூர் அருகே ஏரியூர், காரைக்குடி அருகே குன்றக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஊருணிகள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்றும் மழை தீவிரமடைந்ததால் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

நேற்று காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்ததால் காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில் உள்ள மருதா ஊருணி மற்றும் குடிநீர் ஊருணி நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைவீதி, பஜார் உள்ளிட்ட பகுதியில் சாலையோரத்தில் நூற்றுக்கணக்கான சாலையோர கடை வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.இந்நிைலயில் தொடர் மழை காரணமாக கடைகள் முற்றிலும் மூடப்பட்ட நிலையில் இந்த சாலையோர வியாபாரிகளின் வியாபாரம் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து சாலையோரத்தில் கடை அமைத்துள்ள வியாபாரிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக காரைக்குடி செக்காலை சாலையோரங்களில் நூற்றுக்கணக்கான வியாபாரிகளான நாங்கள் தற்காலிக கடை அமைத்து அதில் சிறிய தொகையிலான ஜவுளிகடை, வீட்டு உபயோக பொருட்கள், அணிகலன்கள், குடை உள்ளிட்ட கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

வியாபாரிகள் பாதிப்பு

ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் மழை பெய்வதால் போதிய விற்பனை இல்லாமல் நஷ்டத்தை சந்தித்து வந்தோம். தற்போதும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் கூடும் மாலை வேளையில் தொடர் மழை பெய்து வருவதால் வியாபாரம் செய்ய முடியாமல் பொருட்களை மூடி வைத்துள்ளோம்.

இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் இருந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்