ராமநாதபுரத்தில் பூக்கள் விலை இருமடங்காக உயர்வு
ஆடி மாத கோவில் திருவிழாக்களை தொடர்ந்து ராமநாதபுரத்தில் பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்து விற்பனையானது.
ஆடி மாத கோவில் திருவிழாக்களை தொடர்ந்து ராமநாதபுரத்தில் பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்து விற்பனையானது.
பூக்கள் விலை
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் வருகின்றன. இந்த பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பெற்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வைகாசி மாதம் திருமண விழாக்கள் காலம் என்பதால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்பின்னர் ஆனி மாதம் பூக்கள் விலை திருமண நாட்களை தவிர மற்ற நாட்களில் இறங்கு முகமாக இருந்தது.
ஆடி மாதம் பிறந்ததும் திருமண விழாக்கள் நடைபெறாத நிலையிலும் கோவில் விழாக்கள் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் என்பதால் பூக்கள் விலை மீண்டும் ஏறுமுகமாக இருந்தது. அனைத்து பகுதிகளிலும் கோவில்களில் ஆடிமாத முளைப்பாரி விழாவையொட்டி காப்புகட்டுதலில் தொடங்கி முளைக்கொட்டு முடியும் வரை பூக்களின் தேவை அதிகம் என்பதால் விலை அதிகரித்து வந்தது. இந்த விலை ஏற்றம் சற்றும் குறையாமல் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் இருமடங்காக உயர்ந்துவிட்டது. ஆடி 18-ம் பெருக்கு மற்றும் ஆடி வெள்ளி ஆகியவற்றிற்காக பூக்களின் தேவை அதிகம் ஏற்படும் என்பதால் பூக்களின்விலை இருமடங்காக உயர்ந்தது.
விலை உயர்வு
இதுகுறித்து ராமநாதபுரம் பூ வியாபாரி ஆனந்தகுமார் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தின் பூ தேவையை மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வாங்கிதான் பூர்த்தி செய்து வருகிறோம். கடந்த மாதம் முழுவதும் பூக்களின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது கோவில் விழாக்கள் என்பதால் இருமடங்கு விலை உயர்ந்துவிட்டது. ஆடி மாத தொடக்கத்தில் பாதியாக இருந்த விலை தற்போது இருமடங்காகி விட்டது. மல்லிகை கிலோ இதற்கு முன்னர் ரூ.400-ஆக விற்பனையானது, தற்போது ரூ.800-ஆக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.300 என இருந்தது தற்போது ரூ.700 ஆகவும், கனகாம்பரம் ரூ.400 என இருந்தது தற்போது ரூ.1000 எனவும், ரோஸ் ரூ.200 என விற்பனையானது தற்போது ரூ.400, செவ்வந்தி ரூ.200 என இருந்தது தற்போது ரூ.400 என இருமடங்காக விலை உயர்ந்தது.
அதிக விலை என்றாலும் தேவையின் காரணமாகவும், கோவில்களுக்கு அவசியம் என்பதாலும் பூக்களை மக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வு கோவில் திருவிழாக்கள் முடிந்ததும் குறையும் என்றாலும் ஆவணி மாதம் பிறந்துவிட்டால் அதிக முகூர்த்தம் இருக்கும் என்பதால் இதனை விட விைல உயரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.