பக்தர்களின் வசதிக்காக தரை விரிப்புகள்
பக்தர்களின் வசதிக்காக தரை விரிப்புகள்
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநறையூரில் சனி பகவான் பரிகார தலமான பருவதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு சனிபகவான் மந்தாதேவி ஜேஸ்டா தேவி ஆகிய இரு மனைவியருடனும் மாந்தி, குளிகன் என இரு புதல்வர்களுடன் குடும்பத்துடன் அருள் பாலிப்பது சிறப்பு. இங்கு தசரத மன்னன் வழிபட்டு நலம் பெற்றதாக புராணம் கூறுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் தினந்தோறும் குளிகை நேரத்தில் சனி பகவானுக்கு அபிஷேகங்கள் மற்றும் கூட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம. இதனால் இந்த கோவிலுக்கு தினம்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பக்தர்களின் நலன் கருதி பகல் நேரங்களில் பிரகாரங்களில் நடந்து செல்வதற்கு தரை விரிப்புகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் அர்ச்சகர் ஞானசேகரன் சிவாச்சாரியார் ஆகியோர் முயற்சியில் பக்தர்களின் உபயமாக நான்கடி அகலம் கொண்ட தேங்காய் நாரால் உருவாக்கப்பட்ட தரை விரிப்பினை பெற்று கோவிலின் பிரகாரத்தில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.மேலும் கோவிலில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு குடிநீர் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.