விநாயகர் சதுர்த்தி திருவிழா கொடியேற்றம்
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர்,
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்தாண்டுக்கான விழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 9 மணிக்கு கொடியுடன் சண்டிகேசுவரர் கோவிலை வலம் வந்து கொடி மரத்தின் அருகே உற்சவர் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
கொடியேற்றம்
கொடிமரத்திற்கு பிச்சைக்குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 10.10 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா நாட்களில் காலையில் வெள்ளி கேடய வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் தினமும் பட்டிமன்றம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள்் நடைபெறுகின்றன..
இரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி காட்சியளித்தார், 2-ம் நாளான இன்று சிம்ம வாகனத்திலும், 3-வது நாள் பூத வாகனத்திலும், 4-வது நாள் கமல வாகனத்திலும், 5-வது நாள் ரிஷப வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
தேரோட்டம்
6-வது நாள் திருவிழாவான வரும் 27-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-வது நாள் மயில் வாகனத்திலும், 8-வது நாள் குதிரை வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 9-ம் நாள் திருவிழாவான 30-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த அலங்காரம் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
10-ம் நாள் விழாவான விநாயகர் சதுர்த்தி அன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி, கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும், மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையலும் நடக்கிறது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு நீர் மோர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.