திண்டுக்கல்லில் உடல் தகுதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா உடல் தகுதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2023-10-07 19:48 GMT

திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா உடல் தகுதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

விழிப்புணர்வு மாரத்தான்

பொதுமக்கள் அன்றாட வாழ்வில் தினமும் உடல் தகுதியை பேணுவது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 17 வயது முதல் 25 வயது வரை மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இருவேறு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், பெண்கள் பிரிவினர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தலைமை தபால் அலுவலகம், பஸ்நிலையம், அண்ணா சிலை, திருச்சி சாலை, ஆர்.எம்.காலனி, தாடிக்கொம்பு சாலை வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவுபெற்றது. இதன் தூரம் மொத்தம் 8 கி.மீ. ஆகும்.

பரிசு தொகை, சான்றிதழ்

இந்த போட்டியில் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் எம்.எஸ்.பி. பள்ளி மாணவர் முகேந்திரன், பெண்கள் பிரிவில் கள்ளிமந்தையம் பி.எம்.எஸ். பள்ளி மாணவி காவியாஸ்ரீ, 25 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஜி.டி.என். கல்லூரி மாணவர் பொன்னுவெள்ளை, பெண்கள் பிரிவில் புனித அந்தோணியார் கல்லூரி மாணவி பியோமேரிதெரசா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் இளமதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-ம் பரிசு வரை தலா ரூ.1,000-மும் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, அன்னை தெரசா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜம், மாவட்ட தடகள சங்கத்தினர், பயிற்சியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்