15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா - கிராம மக்கள் மகிழ்ச்சி...!

விராலிமலை அருகே பெரியகுளத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-05-23 11:16 GMT


புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை அருகே மேப்பூதகுடி கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இங்கு கடந்த வருடம் பெய்த பருவமழை காரணமாக நீர்நிரம்பி வழிந்தது. அப்பகுதி விவசாயிகள் அந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் குளத்தின் நீர் தற்போது வற்றியதாலும் அறுவடை காலம் முடிந்ததாலும் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஒரு மாதத்திற்கு முன்பே ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவுசெய்யப்பட்டது.

அன்று முதல் இக்குளத்தில் யாரும் மீன் பிடிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு நாள் இரவும் குளத்தில் மீன்பிடிப்பதைத் தடுக்க ஊர் பொதுமக்கள் சார்பாக ஒருவரை நியமித்து கடந்த ஒரு மாத காலமாக அந்த நபர் இரவு முழுவதும் குளத்தை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அதனையடுத்து இன்று காலை மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு  மீன்பிடி திருவிழாவானது நடைபெற்றதால் மேப்பூதகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்திற்கு வந்தனர்.

இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க இறங்கினர். இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்துச் சென்றனர்.

ஜாதி மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  ஒற்றுமையாக குளத்தில் இறங்கி மீன்பிடித்த நிகழ்வு கிராம மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக இருந்தது. மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து பயணிகள் வேன் மூலம் சிலர் இங்கு வந்து மீன் பிடித்து சென்ற சம்பவம் உள்ளூர் பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்