மயிலாடுதுறை கலெக்டரிடம் மீனவர்கள் மனு
தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க முயல்வதை தடுக்க வேண்டுமென்று 18 கிராம மீனவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மீனவர்களிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2-ந் தேதி அரசியல் கட்சி பிரதிநிதிகள், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது அரசு விதிமுறைகளை மீனவர்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்றார்.
போலீஸ் பாதுகாப்பு
ஆனால், அரசின் விதிமுறைகளை மீறி ஒருதரப்பினர் சுருக்குமடி வலையை பயன்படுத்தி் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல ஆயத்தமாவதாக தகவல் கிடைத்தது. இதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மீனவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரினர். இதனால், இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும்பொருட்டு பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, திருமுல்லை வாசல், பழையாறு உள்பட மீனவ கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டரிடம் மனு
இந்தநிலையில் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க திரண்டு வந்தனர். அவர்களில் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலெக்டர் லலிதாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், சட்டத்தை மீறி சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க ஒரு தரப்பு மீனவர்கள் முயற்சிக்கிறார்கள். அதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமென்று கூறியிருந்தனர்.
துகுறித்து வானகிரி மீனவ கிராமத் தலைவர் வெற்றிச்செல்வன் கூறுகையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகமும் அதனை செயல்படுத்தி வருகிறது. ஆனால், பூம்புகார் மீனவ கிராமத்தினர் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க படகுகளில் வலையை ஏற்றியுள்ளனர்.
வேலை நிறுத்தம்
சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் மாவட்டத்தில் உள்ள 24 மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று முதல் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் மனு அளித்துள்ளோம். அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.