தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு:4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-09-06 18:45 GMT

தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தி செல்போனை பறித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மீனவர்

தூத்துக்குடி சிலுவைப்பட்டி தாய்நகரை சேர்ந்தவர் ஜோன்ஸ். இவருடைய மகன் செல்வம் (வயது 37). மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். இவர் திரேஸ்புரத்தில் இருந்து மொட்டை கோபுரம் செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தின் அருகே வந்த போது, அங்கு நின்ற 4 பேர் செல்வத்தை வழிமறித்து உள்ளனர்.

செல்போன் பறிப்பு

தொடர்ந்து செல்வத்திடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் செல்வம் பணம் தர மறுத்து விட்டாராம். இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து செல்வத்தை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.550 பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்களாம். வழிப்பறி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.10 ஆயிரத்து 550 என்று கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த செல்வம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்