கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தாசன் (வயது 65), மீனவர். இவருடைய மனைவி இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதனால் தாசன் தனது 2 மகள்களின் வீடுகளிலும் மாறி மாறி வசித்துக் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் காலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றார். அப்போது படகில் இருந்த தாசன் திடீரென நிலைதடுமாறி கடலில் விழுந்துள்ளார். மீன்பிடிக்க சென்ற தந்தை வீட்டிற்கு வராத நிலையில் 2 மகள்களும் மாறி மாறி இருவரின் வீட்டிற்கு சென்றிருப்பதாக நினைத்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் இரையுமன்துறை கடற்கரையில் உள்ள பாறைகளுக்கு இடையே ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கி இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர். பின்னர் நடத்திய விசாரணையில், பிணமாக கரை ஒதுங்கிய மீனவர் தாசன் என தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.