குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடைகளை அனுமதிக்க கூடாது

ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடைகளை அனுமதிக்க கூடாது என்று கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

Update: 2022-11-14 18:50 GMT

சிவகாசி, 

ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடைகளை அனுமதிக்க கூடாது என்று கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

ஆனையூர் பஞ்சாயத்து

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்தில் ஆனையூர், அய்யம்பட்டி, கட்டளைப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள மக்கள் சிலர் நேற்று காலை சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு வந்து யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர கோரி மனு கொடுத்தனர்.

பட்டாசு கடைகள்

அந்த மனுவில் அய்யம்பட்டி மற்றும் ஏ.லட்சுமியாபுரம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அதிலும் குறிப்பாக வாருகால் வசதியுடன் தார் சாலை அமைத்து தர வேண்டும். சேதமடைந்து காணப்படும் பள்ளியை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும். இளைஞர்கள் பயன் பெறும் வகையில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் பட்டாசு கடைகள் வைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.

இதற்கு அனுமதி வழங்ககூடாது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நடவடிக்கை

மனுவை பெற்றுக்கொண்ட யூனியன் துணைத்தலைவர் விவேகன் ராஜ், அடிப்படை வசதிகள் அனைத்தும் 3 மாதங்களில் நிறைவேற்றி தரப்படும். அதற்கான அனைத்து பணிகளும் நடந்து விட்டது.

தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால் சாலை அமைக்கும் பணியும், வாருகால் அமைக்கும் பணியும் செய்யாமல் இருக்கிறது. விரைவில் அந்த பணிகள் செய்யப்படும் என்றார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்