பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-10-18 09:56 GMT

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற வெடி விபத்துகளை சுட்டிக்காட்டி, அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் 10-10-2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது நான் உரையாற்றினேன்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 1,482 பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன என்றும், இதில் 1,085 பட்டாசு ஆலைகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன என்றும், விருதுநகர் மாவட்டத்திற்கு வெளியே, அதாவது அரியலூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் பட்டாசு வெடி விபத்துகள் நடைபெறுவதற்கு காரணம் அங்கு அனுபவம் இல்லாத தொழிலாளர்கள் இருப்பதுதான் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாதத்திற்கு நான்கு முறை ஆய்வு செய்ய குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், தற்போது அனுபவம் மிக்க பணியாளர்கள் உள்ள விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசின் அக்கறையின்மையும், முறையாக ஆய்வு மேற்கொள்ளாததும்தான்.

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு விபத்து ஏற்பட்டு பத்து நாட்கள்கூட முடிவடையாத நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ரங்கபாளையத்தில் ஒரு பட்டாசு ஆலையில் நேற்று மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டு 12 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

இதேபோன்று சிவகாசி, கிச்ச நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், பட்டாசுக்கு மருந்து செலுத்திய போது ஏற்பட்ட உராய்வில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக பட்டாசு ஆலையிலிருந்து வெகுதூரம் சென்றுதான் பட்டாசுகளை சோதிக்க வேண்டுமென்றும், இதனை மீறி பட்டாசு ஆலைக்கு அருகிலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டதுதான் விபத்துக்கு காரணம் என்றும், ரங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கான உரிமம் சென்ற ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், உரிமம் இல்லாமல் பட்டாசு உற்பத்தி அங்கு மேற்கொள்ளப்பட்டது என்றும், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே மேற்படி விபத்துக்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே மேற்படி விபத்துக்கு காரணம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தி.மு.க. அரசால் அளிக்கப்படும் உறுதிமொழிகள் எல்லாம் சொல் அளவில்தான் இருக்கின்றனவே தவிர, செயல் அளவில் இல்லை என்பதை மேற்படி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து மீண்டும் உறுதி செய்துள்ளது.

உண்மையிலேயே தி.மு.க. அரசிற்கு மக்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால், அனைத்துப் பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆய்வினை மேற்கொண்டு, உரிமம் இல்லாத கடைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்வதை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். இதனைச் செய்யாததன் காரணமாக, பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவும், அலட்சியப் போக்கு காரணமாகவும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிக்சை அளிப்பதோடு 3 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்