சென்னை தலைமைச் செயலகத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை தலைமைச் செயலகத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2023-01-23 21:52 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் நேற்று தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள 5-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது போலவும், அங்குள்ள தலைமைச் செயலக பணியாளர்களை பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்பது போலவுமான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 54 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய 'ஸ்கை லிப்டர்' என்ற வாகனம், 6 தீயணைப்பு வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ்கள், ஒரு டிரோன் கருவி பயன்படுத்தப்பட்டன. 52 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று ஒத்திகையை செய்து காட்டினர்.

தத்ரூபமாக...

இதற்காக 5-வது மாடியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. அது தீப்புகை போல கிளம்பியதைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் அபாய ஒலியை எழுப்பியபடி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தன. வீரர்கள் ஏணிகளையும், தண்ணீர் குழாய்களையும் பயன்படுத்தி புகை வந்த இடத்தை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

சில வீரர்கள் 5-வது மாடிக்குச் சென்று தீக்காயம் அடைந்தவர்கள், மயங்கி கிடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளாக ஒத்திகைக்காக கருதப்பட்டவர்களை தூக்கிக்கொண்டு வந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதிக காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெருமளவில் எரியும் தீயை அணைப்பது பற்றியும் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக காணப்பட்டது. இதை ஏராளமான தலைமைச் செயலக பணியாளர்கள் சுற்றி நின்று கவனித்து பாராட்டு தெரிவித்தனர்.

பதற்றம் வேண்டாம்

தமிழக பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜெகநாதன், 'அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதுபோன்ற ஒத்திகை மேற்கொள்ளப்படும். இதற்கு அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தீ விபத்து நிகழ்ந்ததும், தகவல் தெரிவிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் ஒவ்வொரு தளத்திலும் தொடர்பு அலுவலர்கள், தன்னார்வலர்களை நியமித்திருக்கிறோம். எனவே யாரும் தீவிபத்தின்போது பதற்றம் அடைய வேண்டாம்' என்று குறிப்பிட்டார்.

ஆபாஷ்குமார் பேசும்போது, தனியார் கட்டிடங்கள் அருகே தீயணைப்பு வாகனங்கள் நின்று தீயை அணைப்பதற்கு ஏற்ற இடவசதி இருக்கிறதா? என்பது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

பின்னர், இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை தூர நின்று கவனித்து திரையில் காட்டும் நவீன கேமராக்கள் உள்ளிட்ட நவீன தீயணைப்பு கருவிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்