திண்டுக்கல் அருகே தொழிலாளி வீட்டில் தீப்பிடித்தது

திண்டுக்கல் அருகே தொழிலாளி வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2022-05-23 17:35 GMT

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் குள்ளனம்பட்டி அருகே உள்ள பகவத்சிங் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருக்கு மருதாயி (45) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் நல்லாம்பட்டி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் பகவத்சிங் நகரில் உள்ள அவர்களது நிலத்தில் கூரை வீடு ஒன்றை கட்டி நேற்று காலையில் தான் பால் காய்ச்சி குடிவந்தனர். பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். தங்கராஜின் மகன் மட்டும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். மாலை 5.30 மணி அளவில் அவரது வீட்டில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து, அருகே உள்ள குளத்தில் பறந்து விழுந்தது. இந்த விபத்தில் நல்ல வேளையாக அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு தீ பரவவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கூரை வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் தங்கராஜின் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து குறித்து அறிந்த அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் நேரில் சென்று தங்கராஜின் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்