ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரி கைது

தஞ்சையில், தனியார் ஆஸ்பத்திரி கட்டிடத்துக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.;

Update: 2023-10-12 20:26 GMT

தீயணைப்பு அதிகாரி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக தனியார் ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியின் கட்டிடத்துக்கு தடையில்லா சான்று பெறுவதற்காக அதன் அலுவலர்கள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தை அணுகினர்.

அப்போது அங்கு பணியில் இருந்த மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முனியாண்டி(வயது 56), ஆஸ்பத்திரி ஊழியர்கள் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்தார்.

ரூ.14 ஆயிரம் லஞ்சம்

பின்னர் தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு முனியாண்டி, ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கேட்டார். அதற்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சார்பில், ரூ.15 ஆயிரம் கொடுக்க முடியாது என கூறியுள்ளனர்.

அதற்கு முனியாண்டி சரி ரூ.1,000 குறைத்துக்கொள்கிறேன். ரூ.14 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக தடையில்லா சான்று தருகிறேன் என கூறியுள்ளார்.

கையும், களவுமாக பிடித்து கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இதுகுறித்து தஞ்சையில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.14 ஆயிரத்தை ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கொடுத்து அதை முனியாண்டியிடம் கொடுக்குமாறு கூறினர்.

அதன்படி ஆஸ்பத்திரி ஊழியர்கள், ரூ.14 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே வைத்து தீயணைப்பு அதிகாரி முனியாண்டியிடம் கொடுத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, அருண்பிரசாத் ஆகியோர் லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முனியாண்டியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் முனியாண்டியை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து முனியாண்டியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்