முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலையில் தீ
பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
பண்ருட்டி,
எண்ணெய் ஆலை
பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியில் வசித்து வருபவர் இஸ்மாயில். அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு ஆண்டிக்குப்பம் கிராமத்தில் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையை விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் கடந்த 4 ஆண்டு காலமாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் ஆலையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
நள்ளிரவில் தீ
நள்ளிரவு 12 மணி அளவில் ஆலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மள, மளவென ஆலை முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதை பார்த்து கிராம மக்கள் பீதி அடைந்தனர். பின்னர் இது பற்றி பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
எரிந்து சாம்பல்
இதையடுத்து நெல்லிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம் ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தாங்கள் கொண்டு வந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். விடிய, விடிய நடந்த போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கபட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தால் எண்ணெய் தயாரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட முந்திரி ஓடு (தொளும்பு) மூட்டைகள், பாய்லர், இரும்பு மேற்கூரை எரிந்து சாம்பலானது.
ரூ.20 லட்சம் சேதம்
மேலும் தயாரித்து வைக்கப்பட்டிருந்த முந்திரி எண்ணெயும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருப்பதாக முதல் கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இ்ந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.