நத்தக்காடையூர் அருகே வீட்டில் தீப்பிடித்து கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீப்பிடித்து எரிந்த வீடு
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ளபழைய கோட்டை ஊராட்சி கிழக்கு சேமலை வலசு கிராமத்தை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 73). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சவுந்திராள். இவர்களுக்கு மாணிக்கராஜ், ஜெபராஜ் என்ற 2 மகன்களும், ரூபி, இளவரசி என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் ரூபிக்கு திருமணமாகி கணவருடன் ஈரோடு பகுதியில் வசித்து வருகிறார். மேலும் சீரங்கன் கூலி வேலை செய்து வருகிறார். மகன்கள் இருவரும் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளன. அதில் 2 வீடுகளின் மேற்கூரை ஆஸ்பெடாஸ் ஷீட்டால் ஆனது. வீடு தென்னங்கீற்றால் வேயப்பட்டது.
இந்த நிலையில் சீரங்கன் குடும்பத்தினர் அனைவரும் நேற்று வேலைக்கு சென்று விட்டனர். மதியம் 2 மணிக்கு ஆஸ்பெடாஸ் வேயப்பட்ட வீட்டின் உள்ளே ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென்று மற்ற 2 வீடுகளுக்கும் பரவியது. இது பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் அணைக்க முடியவில்லை.
சிலிண்டர் வெடித்தது
அப்போது வீட்டில் இருந்த 2 சமையல் கியாஸ் சிலிண்டரில் ஒன்று டமார் என்று வெடித்து சிதறியது. இதில் கியாஸ் சிலிண்டர் உடைந்ததில் ஒரு பகுதி அருகில் வீட்டிலிருந்த குமரன் மனைவி வீராள் (85) மீது விழுந்தது. இதில் அவருக்கு தீ காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வேலுச்சாமி (வெள்ளகோவில்), மணிகண்டன் (காங்கயம்) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சீரங்கன் தென்னங்கீற்றில் வேயப்பட்ட குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் மற்ற 2 வீடுகளின் பெரும்பாலான பகுதிகள் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த டி.வி., துணிமணிகள், எவர்சில்வர், பித்தளை, பாத்திரங்கள் எரிந்து சாம்பலானது.
இது பற்றிய புகாரின் பேரில் காங்கயம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தில் எரிந்த பொருட்களின் சேத மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.