ஹெல்மெட் இன்றி பெட்ரோல் போட வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

ஹெல்மெட் இன்றி பெட்ரோல் போட வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Update: 2022-06-18 13:49 GMT

கோவை

கோவை மாநகரில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஹெல்மெட் இன்றி பெட்ரோல் போட வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்து உள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டி வரும் நபர்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் அதிவேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவரில் மோதியதில் அதனை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அவர் ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிகிறது. இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் இருந்தது தெரியவந்து உள்ளது. எனவே ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை போக்குவரத்து போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் ஹெல்மெட் இன்றி பெட்ரோல் போட வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் கூறியதாவது:-

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனங்களை இயக்கினாலும், சிலர் ஹெல்மெட் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்து உள்ளோம்.

மாநகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை சேகரித்து, அதில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து ஹெல்மெட் இன்றி வாகனங்களை ஓட்டி வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கேமராவில் பதிவான அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அவர்களது வீட்டு முகவரிக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும். இதுகுறித்து மாநகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்