விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு நிதி உதவி
விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு நிதி உதவியை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.;
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லி அருகே உள்ள படிச்சேரி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 45). சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வந்தார் இவருடைய மனைவி அனிஷிதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அனிஷிதா கேரள மாநிலம் கள்ளியோடு பகுதியில் செயல்படும் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இதனால் அங்கிருந்து தினமும் சேரம்பாடிக்கு சதீஷ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சுள்ளியோட்டில் இருந்து சேரம்பாடிக்கு வந்தபோது லாரி மோதிய விபத்தில் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய போலீசார் முடிவு செய்தனர்.இதன்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் ஆகியோர் தங்களது ஒரு நாள் ஊதியத்தையும் மற்ற போலீஸ்காரர்கள் கணிசமான பங்களிப்பையும் வழங்கினர்.முடிவில் வசூலான ரூ.3¾ லட்சத்தை சதீஷின் அனிஷிதாவிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் வழங்கினார். அப்போது அவருடன் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுசிலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, ஷியாம் சுந்தர் ஆகியோர் இருந்தனர்.