நாமக்கல் மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

Update: 2023-07-01 15:13 GMT

சென்னை,

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆயில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மெட்டாலா நோக்கிச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் நிதிஷ்குமார், அபினேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக 130 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தனர். இதைப் பார்த்த கணவாய்ப்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி, த/பெ.இடும்பன் (வயது 45), அசோக்குமார், த/பெ.மாரிமுத்து (வயது 35) மற்றும் சரவணன், த/பெ.கந்தசாமி (வயது 35) ஆகியோர் கிணற்றில் விழுந்த மாணவர்களை மீட்க கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளனர்.

இந்த மீட்புச் சம்பவத்தில் குப்புசாமி த/பெ.இடும்பன் (வயது 45), அசோக்குமார், த/பெ.மாரிமுத்து (வயது 35) மற்றும் சரவணன், த/பெ.கந்தசாமி (வயது 35) மற்றும் சிறுவன் விக்னேஷ் (வயது 15) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு வருத்தமடைந்தேன்.

இவ்விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் நிதிஷ்குமார், த/பெ.கண்ணன் (வயது 15) மற்றும் அபினேஷ், த/பெ.குப்புசாமி (வயது 15) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்