முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்தார்.
சென்னை,
கடந்த ஏப்ரல் 14-ந் தேதி அன்று பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டிருந்தார். இந்த பட்டியல் குறித்து திமுக அமைச்சர்கள் அண்ணாமலை ஆதாரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்றும், ரூ 500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சொத்து குறித்து ஆங்கிலத்தில் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், இந்த ஆடியோ பதிவு உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் சந்தித்தார். நாளை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இது வழக்கமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆடியோ விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தநிலையில், முதல்-அமைச்சருடனான இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.